Wednesday, September 16, 2015

மூன்று பெண்மணிகள்

இன்று நான் படித்த வலைப்பதிவுகளில் மூன்று
என்னை மட்டும் அல்ல
என் போன்றவர்களை சிந்திக்க வைக்கும் என நினைக்கிறேன்.
மூன்று பெண்மணிகள். முதலிலே ஒரு மொழி பெயர்ப்பாளர், அடுத்து ஒரு திக்கற்ற பெண்ணின் தாய், மூன்றாவது ஒரு அன்னை.
+mohan gurumurthy
முதலாவது திரு மோகன்ஜி அவர்கள் வலைப்பதிவு. 
திருமதி கீதா மதிவாணன்  அவர்களின் "என்றாவது ஒரு நாள்" எனத் தலைப்பினைக் கொண்ட அண்மைய மொழி ஆக  நூலின் ஒரு கருத்துரையாக இந்த பதிவு இருக்கின்றது.

ஒரு மொழிப்பெயர்ப்பு என்றால் அந்த ஆக்கத்தைக் கையாளுபவர் திறன் குறித்தும், அதைப் படிப்பவர் மன நிலை, அவர்களுடைய மன நிலைபாடுகள்,
குறித்தும் இவர் சொல்லும் கருத்துக்கள் எல்லோரையுமே குறிப்பாக, மொழி பெயர்க்கும் ஆற்றல் படைத்தோருக்கும், அந்நிய இலக்கியத்தைப் படிக்கும் ஆர்வலர்களுக்கும் அவசியம்.

இதைப்படித்த எனது பின்னூட்டம் இது.

மொழியாக்கத்தினை படிப்பவரின் மனவோட்டமும் முன்முடிபுகளும் கூட இங்கு கவனம் கொள்ளத்தக்கது. ///

பல நேரங்களில், மொழி பெயர்ப்பு நூலை படிப்பவர் முன்னமேயே அதன் மூலத்தையும் படித்திருக்கும் சாத்தியக் கூறுகளும் உண்டு.
இரண்டாவது, மொழி பெயர்ப்போர் பெரிதும் தாம் மொழி பெயர்த்திடும் நூலினை அம்மொழி பேசப்படும் மக்கள் தம் இயல்பு நடையில் சொல்லாது, தத்தம் சொற்கட்டுத் திறனைக்  காட்டிடவே செய்கின்றனர்.
மூன்றாவது, மொழி பெயர்ப்பில் தனது முன் மன உறுதிப் பாடுகளை நுழைத்து விடுகின்றனர். மொழி பெயர்க்கவேண்டும், அதே சமயம் தமது நிலைப்பாடுகளையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று நினைப்பவர் உண்டு. இவர்களின் மொழி பெயர்ப்பில் இவர்களது மொழி வல்லமை தெரிகிறதே தவிர, மூலத்திற்கு அவர்கள் செய்யும் நீதியாக என்னால் கருத இயலவில்லை.
இதைத் தவிர, சிலர் இந்த "செப்பிடு வேலையில்" தன்னாலும் முடியும் என்று காட்ட வேண்டும் அல்லது தனக்கும் அந்த மொழியிலோ அந்த நூலிலோ பாண்டித்தியம் உண்டு எனப் பிரதர்சனம் செய்ய ஆவலுற்று, அந்த நூலில் முன்னமேயே ஏதேனும் இரண்டு மூன்று மொழி பெயர்ப்புகளைப் படித்து விட்டு , தனக்குப் புரிந்த  வகையில், எதை மொழி பெயர்ப்பதாகச் சொல்கிறார்களோ, அந்த மொழியே தெரியாத நிலையில் கூட , தான் மொழி பெயர்த்ததாக கூறும் நிலை பார்க்கிறேன். இவர்களைக் கண்டால், மனம் இவர்களைப் பார்த்து வருத்தம் தான் கொள்கிறது.
இதைப் பற்றி இன்னமும் சொல்ல இரண்டாயிரம் சொற்கள் இரண்டு நாட்கள் வேண்டும்.
நீங்கள் கருத்துரை வழங்கி இருக்கும் திருமதி கீதா அவர்களின் நூலை வாங்கியேனும் படிக்கவேண்டும் என்ற ஆவலைக் கிண்டி  இருக்கிறீர்கள் .
வழக்கம் போல, உங்களது பதிவு
வாழை இலை விருந்து.
சுப்பு தாத்தா.

******************************************************************************************
அடுத்ததாக, நிலாமகள் என்னும் பறத்தல் பறத்தல்-நிமித்தம் என்னும் வலைப்பதிவில் ஒரு காட்சி. 
 +Nilaa maghal 
 +நிலா மகள் 
துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப் பிடியேயான் நின்னை இரப்பல் - கடிகமழ்ந்தார்ச் சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெம் சாலேகம் சாரா நட -முத்தொள்ளாயிரம் 50

 இந்தக் காட்சி முத்தொள்ளாயிரத்திலே வரும் காட்சி. பதிவரோ அதற்கென
ஒரு கதை ( கற்பனை தான் என நினைக்கிறேன்.) புனைந்து இருக்கிறார். அதைப் படிக்கும்போது கண்கள் குளமாகின என நான் சொல்வது மிகையல்ல.
நீங்கள் அந்தக் கதையைப்ப்டடிக்கவேண்டும்.

இந்தப் பதிவுக்கு நான் இட்ட பின்னோட்டம் இது.

விதி எனச் சொல்லி ஓடிப்போவதா ?
மதி இழந்த செயலது. நான் என் செய்வேன் எனச் சொல்வதா?
பதி என்றவன் தன்னைக்
கதியற்று நிற்கச்செய்து
நிதி கொண்டு வா இல்லையேல்
நீ இல்லை எனச் சொல்கிறானே...
நீதி எங்கே ? மனு
நீதிச் சோழா நீ வந்து
சொல்.
சுப்பு தாத்தா. 
 ***********************************************************************************
மூன்றாவதாக,
அம்மாவை நினைவு கூர்ந்து எழுதுவோருக்கு பஞ்சமில்லை.
அண்மையிலே விஜய் டி.வி. யில் நீயா நானா வில் பங்கு எடுத்துக்கொண்ட ஒரு தாய், இந்த மாதிரி அம்மாவைப் புகழ்வதில் ஒரு செயற்கைத் தன்மை இருக்கிறதோ என்று மட்டுமல்ல, அம்மாவை ஒரு காமெடி மாதிரி ஆக்கிவிட்டார்களோ என்றும் ஐயப்பட்டார். அந்த அளவுக்கு அம்மாவை பாலாபிஷேகம் செய்கிறோம் என்கிறார்.
அப்படிப்பட்ட சூழலில் தனது அம்மாவை அல்ல, தனது கணவரின் அம்மா,
மாமியாரைப் போற்றும் ஒரு பதிவு "ஒரு அருமை அன்னையின் தினம் " என்று ஒரு தலைப்பு உடன் எழுத , மிக்க பெருந்தன்மை வேண்டும். அப்படி தனது மருமகளால் போற்றப்படவேண்டும் என்றால், அந்த மாமியார் எத்துணை பெருந்தன்மை, கருணை உள்ளம் படைத்தவராக இருக்கவேண்டும்.!!

உண்மையிலே பார்த்தால் மாமியார் கொடுமை என்பதே  ஒரு பர்செப்ஷன். எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில் மிகவும் சுமூகமான உறவு காணப்படுகிறது.
+revathi narasimhan
மாமியாரைப் புகழும் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள் பதிவு இங்கே. அதற்கு எனது பின்னோட்டம் இது.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
என நினைத்த, நினைக்கின்ற, நினைக்க இருக்கும்
பெண்மணிகள் எல்லோருமே
சிறந்த பெண்களாக, குடும்பத் தலைவிகளாக, மாமியார்களாக,
விளங்குகிறார்கள்.
இவர்கள் "தெய்வத்துள்" போற்றப்படுவது
நாமும் போற்றுவது இயல்பே.
பாசம் என்ற சொல்லை ஒரு சிறிய வளையத்துக்குள் பதுக்காது ,
பாச வலைதனை பரப்பி எல்லோரையும் அணைக்கையில்,
ஒரு பையனுக்குத் தாயார் என்ற நிலையில் இருந்து
பத்மாக்ஷி தாயார் ஆகிவிடுகிறார்.
சுப்பு தாத்தா. 
 
மாமியாரோடு இருக்கும் மருமகள் யாவருமே இந்தப் பதிவினைப் படிக்கவேண்டும். நீங்கள் இது போன்ற ஒரு பதிவு எழுதவேண்டும் என நான் சொல்லவில்லை. இது போன்ற மாமியாராக, நீங்கள் ஒரு எதிர்காலத்தில், பிரகாசிக்கவேண்டும்.